Tuesday, August 17, 2010

உள்ளூர்மயமாக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் செயலிகள் தொடர்பான மாநாடு - 2010

உள்ளூர்மயமாக்கப்பட்ட செயலிகளிற்கான சிறப்புமையம், மொறட்டுவைப் பல்கலைக்கழகம் இரண்டாவது முறையாகவும் உள்ளூர்மயமாக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் தொகுதிகளிற்கான மாநாட்டினை ஒழுங்கு செய்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு -
www.lakapps.lk/clsa

சர்வேஸ்

Monday, August 9, 2010

தமிழில் இணைய முகவரிகள்!

தமிழில் இணைய முகவரிகள்!
கெ.சர்வேஸ்வரன்,
கணினிப் பொறியியலாளர்,
LK ஆள்களப் பதிவகம்
http://தளம்.ஆள்களமையம்.இலங்கை

இணையத்தில் இன்று ஏராளமான தமிழ் இணையத்தளங்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஏராளமானவர்கள் வலைப்பூக்களைத் தமிழில் எழுதிவருகிறார்கள். ஆனால் நாம் குறித்த தளங்களை அடைவதற்கு ஆங்கில முகவரிகளையே பயன்படுத்தவேண்டியிருந்தது. ஆனால் இந்த தமிழ் இணைய முகவரிகளின் அறிமுகத்துடன் நாம் இனி முகவரிகளையும் தமிழில் எழுதலாம். முக்கியமாக உலகத்தில் முதன் முதலாக தமிழில் இணைய முகவரியை எழுதும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது.
இணையத்தில் உள்ள வளங்கள் இணைய முகவரிகள் மூலம் அடையாளப்பட்டுத்தப்படுகின்றன. உதாரணமாக www.gov.lk, www.nic.lk. www.gov.lk முகவரியைப் பார்க்கும் எவரும் இது இலங்கை அரசுக்குரிய இணையத்தளம் என்று இலகுவில் சொல்லிவிடலாம். இந்த இணைய முகவரியில் .lk என்பது நாட்டைக்குறிக்கிறது. இவ்வாறு ஏனைய நாடுகளைக்குறிப்பதற்கும் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக .in ஆனது இந்தியாவைக் குறிக்கும். இதேபோல் .com, .org, .net , .info போன்றவையையும் இணைய முகவரிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக www.google.com எனும்போது அது ஒரு வர்த்தக நிறுவனத்திற்குரிய இணையத்தளம் என்பதை அடையாளங்கண்டுகொள்ளலாம். இந்த நாடுகளைக்குறிக்கும் .lk, .in, .com, .info, .net, .org போன்றன உயர்நிலை ஆள்களங்கள் (Top Level Domains) என்று அழைக்கப்படுகின்றன. இந்த உயர்நிலை ஆள்களங்களை ICANN நிறுவனம் நிர்வகித்து வருகிறது. எனவே நாம் புதிதாக ஒரு ஆள்களத்தை உருவாக்கவேண்டுமானால் ICANN நிறுவனத்தின் அனுமதியைப் பெறவேண்டும்.
இணையத்தில் நாம் இவ்வாறு இணைய முகவரிகளை இணைய உலாவிகளில் உள்ளீடு செய்து குறித்த இணையத்தளங்களைப் பெற்றாலும் கணினிகள் நாம் இவ்வாறு கொடுக்கும் பெயர்களை விளங்கிக்கொள்வதில்லை. எனவே நாம் இணைய முகவரிகளைக் கொடுத்தாலும் கணினிகள் அவற்றை குறித்த எண் வடிவங்களுக்கு மாற்றி நாம் வேண்டும் செயற்பாடுகளைச் செய்யும். ஆனால் மனிதர்களாகிய எமக்கு எண்களைவிட பெயர்களை ஞாபகம் வைத்திருப்பது சுலபம். ஆகவே மனிதர்களின் பயன்பாட்டை இலகுபடுத்தவே இந்த இணைய முகவரிகள் வந்தன. இன்றுவரை இந்த இணைய முகவரிகள் ஆங்கில எழுத்துக்களாலேயே எழுதப்பட்டு வருகின்றன. அத்தோடு முக்கியமாக நாம் இணைய முகவரிகளை எழுதும்போது அவற்றைச் சரியாக எழுதவேண்டும். அல்லாவிட்டால் நாம் எதிர்பார்க்கும் இணையத்தளங்களைப் பெறமுடியாது போகும்.
தமிழர்களாகிய எமக்கு நிச்சயமாக ஆங்கில முகவரியை ஞாபகம் வைத்திருப்பதைவிட தமிழ் முகவரிகளை ஞாபகம் வைத்திருப்பது இலகு. அத்தோடு இணைய முகவரிகள் தமிழில் இருக்கும்போது அவற்றைப் பிழையில்லாமலும் இணைய உலாவிகளில் உள்ளீடு செய்து சரியான பக்கங்களுக்குச் செல்லலாம். உதாரணமாக ‘www.parliament.lk’ என்பதை ஞாபகம் வைத்திருப்பதைவிட ‘தளம்.பாராளுமன்றம்.இலங்கை’ என்பதை ஞாபகம் வைத்திருப்பது தமிழர்களாகிய எமக்கு இலகுவாக இருக்கும். இவ்வாறு ஆங்கில எழுத்துக்கள் தவிர்ந்த ஏனைய மொழிகளிலான எழுத்துக்களில் இணைய முகவரிகளை Internationalised Domain Names (IDNs) என்று சொல்வார்கள். இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் அண்மைக்காலங்களாக மிகுந்த முன்னெடுப்புடன் செய்யப்பட்டுவருகிறது.
இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளே புழக்கத்தில் இருந்துவருகின்றன. கொழும்பு போன்றன நகர்சார் பகுதிகளைத் தவிர ஏனைய பிரதேசங்களில் ஆங்கில அறிவு அவ்வளவு சிறப்பான மட்டத்தில் இல்லை என்பதே உண்மை. முக்கியமாக கிராமங்கள் மற்றும் பின்தங்கிய இடங்களில் ஆங்கில அறிவு இன்னமும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. கணினியைப் பொறுத்தவரை ஊடாட்ட மொழி ஆங்கிலமாகவே இருந்துவருகிறது. இதனால் ஆங்கில அறிவு குறைந்தவர்கள் கணினியைப் பயன்படுத்த தயங்கலாம். இந்நிலையில் இலங்கையில் அண்மைக்காலங்களில் உள்ளூர் மொழிக்கு கணினியை மாற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இயங்குதளங்கள் மற்றும் பல்வேறு அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருள்கள் இன்று தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழ் மற்றும் சிங்கள எழுத்துக்களை எந்த அடிப்படையிலே தட்டச்சுச் செய்யவேண்டும், தட்டச்சு செய்யும் விசைப்பலகையின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பனவற்றிற்கான நியமங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன (SLS 1134 : 2004, SLS 1326 : 2008).
இந்நிலையில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் LK ஆள்கள பதிவகம், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA), அரச மொழியியல் திணைக்களம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, பல்கலைக்கழகங்கள், இணைய சேவை வழங்குனர்கள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு போன்றன இணைந்து இணைய முகவரிகளைத் தமிழ் மற்றும் சிங்களத்தில் கொண்டுவருவதற்கான செயற்பாட்டை ஆரம்பித்தன.
முன்னர் குறிப்பிட்டதுபோல் இணையத்தில் .lk என்று ஒரு முகவரி இருக்கும் பட்டசத்தில் குறித்த முகவரி இலங்கை தொடர்பானதொரு இணையத்தளம் என்பதை அறிந்துகொள்ளலாம். இவ்வகையில் இணையத்தில் இலங்கையின் அடையாளம் .lk என்றே இருந்து வந்தது. பல ஆய்வுகளுக்குப் பின்னர் .lk என்பதற்குப் பதிலாக ‘.இலங்கை’ என்று தமிழிலும் ‘.ලංකා’ என்று சிங்களத்திலும் பயன்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ‘.lk’ போன்று ‘.இலங்கை’ மற்றும் ‘.ලංකා’ போன்றனவும் உயர்நிலை ஆள்களப் பெயர்கள் என்பதனால் அதற்கு ICANN நிறுவனத்தின் அனுமதியைப் பெறவேண்டிய தேவை இருந்தது. ICANN நிறுவனம் நிபுணர்களைக் கொண்டு ‘.இலங்கை’ மற்றும் ‘.ලංකා’ போன்றன மிகப்பொருத்தமான தெரிவுகளா இந்தப் பெயர்களால் ஏதாவது தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுமா போன்ற விடயங்களை எல்லாம் ஆராய்ந்து ‘.இலங்கை’ மற்றும் ‘.ලංකා’ போன்ற சரியான தெரிவுகளே என்பதை கடந்த மார்ச் மாதம் அளவில் ஏற்றுக்கொண்டது. இதன்பின்னர் இலங்கையில் இந்த தமிழ் மற்றும் சிங்கள ஆள்களப் பெயர்களை பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் 28ம் திகதி ஜூன் 2010 LK ஆள்களப்பதிவகம் தமிழ் மற்றும் சிங்கள இணைய முகவரிகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆரம்ப நிகழ்வு மேற்குறித்த தினத்தில் மாண்புமிகு அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உலக நாடுகள் பலவற்றிலிருந்து இத்துறைசார் வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டனர்.


LK ஆள்களப்பதிவகத்தின் கொள்கையின் அடிப்படையில் தற்போது ‘.lk’ ஆள்களப்பெயரை பதிவுசெய்திருக்கும் எவரும் இலவசமாக தமிழ் மற்றும் சிங்கள இணைய முகவரிகளை இலவசமாகப் பெறலாம். உதாரணமாக ஏற்கனவே www.gov.lk, www.parliament.lk போன்ற தளங்களை தமிழ் மற்றும் சிங்கள இணைய முகவரிகளூடு அடையலாம். உதாரணமாக ‘தளம்.அரசு.இலங்கை’, ‘தளம்.பாராளுமன்றம்.இலங்கை’ என்ற தமிழ் இணைய முகவரிகளூடு நாம் குறித்த இணையத்தளங்களுக்குச் செல்லலாம்.
மேலதிக விபரங்களுக்கு : தளம்.ஆள்களமையம்.இலங்கை அல்லது www.nic.lk தளத்தை நாடவும்.